ஒரு பொம்மையின் கதை
உறுதியான விக்ரமார்க்கன் மீண்டும் மரத்தின் அருகே சென்று, மரத்திலிருந்து சடலத்தை கீழே இறக்கி தோளில் சுமந்துகொண்டு சுடுகாடு செல்லும் பாதையில் நடந்தான். அப்போது சடலத்தில் மறைந்திருந்த வேதாளம், "ராஜா, நீ எந்த உயர்ந்த இலக்கை அடைய இவ்வளவு கடினமாக உழைக்கிறாயோ, அதை அடைய அதிக கடின உழைப்பும் விடாமுயற்சியும் தேவை. இந்த இரண்டு குணங்களும் உன்னிடம் உள்ளன. ஆனால் அதிர்ஷ்டமும் சேர்ந்திருந்தால் தான் மனிதன் வெற்றி பெறுகிறான். அப்போது தான் விருப்பங்கள் நிறைவேறும், இலக்கை அடைய முடியும். ஆனால் சில நேரங்களில் கடின உழைப்பு பலன் தரும், எதிர்பார்த்ததை விட அதிக பலன் கிடைக்கும், ஆனால் சிலர் வேண்டுமென்றே அந்த வெற்றியை கையை விட்டு நழுவ விடுகிறார்கள்.
உன்னை எச்சரிக்கவே ஒரு இளைஞனின் கதையை சொல்கிறேன். அதைக் கேட்கும்போது உன் சோர்வு நீங்கும்." என்று வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது.
சூங்கபர் ஜமீன்தாரியில் சாக்கேத்புரி என்ற கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் திலீப் ஒரு வசதியான விவசாயியின் மகன். விவசாய வேலைகளில் அவனுக்கு அதிக ஆர்வம் இல்லை, ஆனால் கைவினைப் பொருட்களில் அவன் புத்திசாலியாக இருந்தான். எந்த கலையையும் ஒரு முறை பார்த்தால், உடனே அதை நன்றாக கற்றுக் கொள்வான். களிமண் அல்லது சுண்ணாம்பு கிடைத்தால், அதிலிருந்து அழகான பூந்தொட்டி அல்லது பொம்மை செய்வான். கையில் மூங்கில் கிடைத்தால் அதிலிருந்து இனிமையான புல்லாங்குழல் தயாராகும். ஏதாவது ஒரு அழகான காட்சியைப் பார்த்தால், அந்த படத்தை முடிக்கும் வரை தூங்க மாட்டான். ஏகலைவனைப் போல திலீப் இந்தக் கலைகளை தானே கற்றுக் கொண்டான்.
அந்த வருடம் சூங்கபர் ஜமீன்தாரின் மகள் மணிமாலாவின் பதினெட்டாவது பிறந்த நாள் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருந்தது. ஜமீன்தார் தண்டோரா போட்டு எல்லா மக்களையும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். சாக்கேத்புரி கிராம மக்கள் திலீப்பிடம் இந்த நல்ல சந்தர்ப்பத்தில் ஜமீன்தார் மகளுக்கு கொடுப்பதற்காக அற்புதமான ஒரு பரிசை தயார் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள். என்ன மாதிரி பரிசு கொடுக்கலாம் என்று திலீப் நிறைய யோசித்து கடைசியில் சிவப்பு சந்தனத்தில் சிம்மாசனம் செய்ய முடிவு செய்தான். அடுத்த நாளே ரத்த சந்தன மரக்கட்டைகள் வரவழைக்கப்பட்டன. வேலை தொடங்கியது.
சிம்மாசனத்தின் கைகளை அன்னப்பறவையின் இறக்கைகள் போலவும், கால்களை மானின் கால்களை போலவும் வடிவமைத்திருந்தான். பின்புறத்தில் வண்ணக் கற்கள் பதித்து, கொடிகளின் வேலைப்பாடுகளை செதுக்கியிருந்தான். வேலை முடிந்ததும் மீதமுள்ள சந்தன மரத்தில் இருந்து ஒரு சிறிய அழகான பொம்மையை செய்தான். அந்த பொம்மை மிகவும் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருந்தது. அதை தனக்காக பத்திரமாக வைத்துக்கொள்ள முடிவு செய்தான். அதற்கு அழகான பட்டு புடவை செய்து நகைகளால் அலங்கரித்தான்.
சிம்மாசனத்தையும், சந்தன பொம்மையையும் பார்த்து கிராம மக்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். அவர்கள் சூங்கபருக்கு சென்று அந்த சிம்மாசனத்தை ஜமீன்தாரின் மகளுக்கு பரிசாக கொடுத்தார்கள். அந்த அழகான சிம்மாசனத்தை பார்த்தவுடன் அவள் மிகவும் சந்தோஷப்பட்டாள். அந்த கலைஞனை பார்க்க வேண்டும் என்று தன் தந்தையிடம் விருப்பம் தெரிவித்தாள். திலீப் அழைக்கப்பட்டான். திலீப் வரும்போது அந்த சந்தன பொம்மையையும் கொண்டு வந்திருந்தான். மணிமாலாவுக்கு அந்த பொம்மை மிகவும் பிடித்திருந்தது, அந்த கலைஞனையும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
"தந்தையே, எனக்கு இந்த அழகான பொம்மை வேண்டும்," என்று மணிமாலா சொன்னாள்.
"மன்னிக்கவும், நான் இந்த பொம்மையை எனக்காகவே செய்தேன். இதை கொடுக்க முடியாது," என்று திலீப் திட்டவட்டமாக சொன்னான்.
"நீ கேட்கும் விலை கிடைக்கும். சொல்லு, எவ்வளவு வேண்டும்?" என்று ஜமீன்தார் கேட்டார்.
"ஐயா, இந்த பொம்மை என் கலை, என் உயிர். அதை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன்," என்று திலீப் உறுதியான குரலில் சொன்னான்.
"உயிரில்லாத இந்த பொம்மை உனக்கு உயிரா? இந்த மணிமாலா உனக்காக தயாராக இருக்கிறேன், ஆனால் அந்த பொம்மையை மட்டும் என்னிடம் கொடுத்துவிடு," என்று மணிமாலா சொன்னாள். அவள் மனதில் திலீப் மீதும் அவன் கலை மீதும் காதல் ஏற்பட்டது.
"இந்த பொம்மை என் மனதில் இருக்கும் அழகியின் பிரதிபலிப்பு. அதே மாதிரி மனைவி தான் எனக்கு வேண்டும். மன்னிக்கவும், உங்கள் விருப்பத்திற்கு நான் சம்மதிக்க முடியாது," என்று திலீப் தீவிரமாக சொன்னான்.
அவனுடைய உறுதி மற்றும் தைரியத்தை பார்த்து கர்வம் பிடித்த மணிமாலா மனம் வருந்தினாள். ஆனால் தன் கோபத்தை வெளியே காட்டாமல் தன் தந்தையை பார்த்தாள். ஜமீன்தாருக்கு தன் மகளின் எண்ணம் புரிந்தது. அவர் திலீப்பை பார்த்து, "திலீப், நீ ஒரு அற்புதமான கலைஞர் என்பது எனக்கு தெரியும்! அதற்கு என் வாழ்த்துக்கள்! நான் உனக்கு ஆறு மாதம் அவகாசம் கொடுக்கிறேன். அந்த நேரத்தில் உனக்கு விருப்பமான பெண் கிடைத்தால் சரி, இல்லை என்றால் நீ இந்த பொம்மையை என் மகளுக்கு கொடுக்க வேண்டும், அவள் ஆசையை நிறைவேற்ற வேண்டும். அப்படி நீ செய்யவில்லை என்றால் உன்னை என் ஜமீன்தாரியிலிருந்து ஒதுக்கி வைப்பேன்," என்று ஜமீன்தார் கோபமாக சொன்னார்.
"உங்கள் விருப்பம்!" என்று பதில் சொல்லி திலீப் அங்கிருந்து புறப்பட்டு தன் கற்பனையில் இருந்த அழகியை தேடி ஊர் ஊராக அலைந்தான். அவனுக்கு அதே மாதிரியான அழகி எங்கும் கிடைக்கவில்லை. ஒரு நாள் சோர்ந்து போன நிலையில் அவன் காட்டில் நடந்து போகும் போது பசியால் வாடி, மயங்கி கீழே விழுந்தான். அவன் கண் விழித்தபோது அவன் ஒரு குடிசையில் இருப்பது அவனுக்கு தெரிந்தது.
அவனுக்கு முன்னால் சாதாரண தோற்றமுடைய ஒரு பழங்குடி பெண் இருந்தாள். திலீப் கண் விழித்தவுடன் அந்தப் பெண் குடிக்க தண்ணீர் கொடுத்தாள், "நீங்கள் காட்டில் மயங்கி விழுந்து கிடந்தீர்கள். அந்த மலை தேவியின் கருணையினால் இப்போது நீங்கள் சுயநினைவுக்கு வந்துள்ளீர்கள். நான் மலை எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து கொடுத்தேன், அதன் தாக்கம் உங்கள் மீது இருந்திருக்கலாம். இருங்கள், நான் இப்போதே அப்பாவை கூப்பிட்டு வருகிறேன்," என்று கூறினாள்.
அப்படி சொல்லிக்கொண்டு அவள் வெளியே ஓடினாள். அவள் பெயர் மங்களா. அவளுடைய தந்தை அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மூலிகை மருந்துகள் கொடுத்து வைத்தியம் செய்து வந்தார். அவர் தன் மகளுடன் குடிசைக்கு வந்து திலீப்பின் நாடியை பார்த்துவிட்டு யோசித்து சொன்னார், "நீங்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறீர்கள். நான்கு நாட்கள் இங்கே தங்கி ஓய்வெடுங்கள். என் மகள் மங்களா உங்களுக்கு சேவை செய்வாள்."
திலீப் சம்மதித்தான். நான்கு நாட்களும் அவன் மங்களாவை நன்றாக கவனித்தான். ஒரு நாள் ஒரு புலி வேட்டைக்காரனிடம் இருந்து தப்பித்தது, ஆனால் காயம் அடைந்தது. அதன் காலில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மங்களா அதன் காலில் கட்டு போட்டாள். "அந்த கொடிய மிருகம் உன்னை தின்றுவிடும் என்று பயப்படவில்லையா?" என்று திலீப் ஆச்சரியமாக கேட்டான்.
"இல்லை, அது கொடிய மிருகம் தான், ஆனால் பசிக்கும் போது தான் அது யாரையாவது தாக்கும். நம் கண்களில் அன்பு, கருணை தெரிந்தால், அது நமக்கு தொந்தரவு கொடுக்காது," என்று மங்களா சிரித்துக் கொண்டே சொன்னாள். அவள் இலை தழைகளை பறித்து அரைத்து, சூடான கஷாயம் செய்து கொடுத்து தந்தைக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். எல்லா வீட்டு வேலைகளையும் தானே செய்து கொண்டிருந்தாள். இனிமையான குரலில் அழகான பாடல்களையும் பாடினாள். யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் அவள் முன்னால் வந்து உதவி செய்தாள்.
நான்கு நாட்களுக்கு பிறகு கிளம்பும் முன் அந்த சந்தன பொம்மையை திலீப் அவளிடம் கொடுத்து, "உன் உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அதன் நினைவாக இந்த பொம்மையை உனக்கு பரிசாக கொடுக்கிறேன், வாங்கிக்கொள்," என்று சொன்னான்.
"வேண்டாம், என் மனப்பூர்வமான ஆசை இந்த பொம்மை போல அழகான மனைவி உங்களுக்கு கிடைக்க வேண்டும். நீங்கள் பத்திரமாக வீடு போய் சேர்ந்தாலே எனக்கு போதும்," என்று அவள் பொம்மையை வாங்க மறுத்துவிட்டாள். உள்ளே இருந்து காட்டுத் தேன் குடுவையை எடுத்து திலீப்பிடம் கொடுத்தாள்.
"உன் தேன் மட்டுமல்ல, அதைவிட இனிமையான உன் மனசு. என்னை கல்யாணம் செஞ்சுக்கிறியா?" என்று திலீப் தன் மனதில் இருந்ததை அவளிடம் கேட்டான். மங்களா வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே குடிசைக்குள் போனாள். ஒரு வாரத்திற்குள்ளாக மங்களாவின் தந்தை அவர்கள் திருமணத்தை நடத்தி மங்களாவை திலீப்புடன் அனுப்பி வைத்தார்.
திலீப் தன் மனைவியுடன் சூங்கபருக்கு சென்று ஜமீன்தாரை பார்த்து சொன்னான், "ஐயா, உங்கள் மகள் சந்தன பொம்மையை கேட்டார்கள், அதை வாங்கிக்கொள்ளுங்கள். நான் இந்த பொம்மையை அவர்களுக்கு கொடுக்கிறேன், ஏற்றுக்கொள்ளுங்கள்."
"அதற்கு என்ன விலை கொடுக்கலாம்?" என்று ஜமீன்தார் கேட்டார்.
"நான் அதற்கு விலை கேட்கவில்லை. நான் இதை அவர்களுக்கு பரிசாக கொடுக்கிறேன்," என்று திலீப் பணிவாக சொன்னான். அப்போது மணிமாலா அங்கு வந்து, "இந்த பழங்குடி பெண் தான் உன் கற்பனையில் இருந்த அழகியா? பொம்மை எவ்வளவு அழகாக இருக்கிறது, அதை ஒப்பிடும்போது இவள் ஒன்றுமே இல்லையே. இவள் என்னை விட அழகாக இருக்கிறாள் என்று நினைக்கிறாயா? தந்தையே, திலீப் தோற்றுவிட்டான். அவனுடைய பொம்மையை பிடுங்கிக்கொள்ளுங்கள். அவனுக்கு கடுமையான தண்டனை கொடுங்கள்," என்று சொன்னாள்.
ஜமீன்தார் ஒருமுறை தன் மகளை பார்த்துவிட்டு பிறகு திலீப்பை பார்த்து, "திலீப், என்னை மன்னித்துவிடு. என் மகளின் அகங்காரமான மற்றும் கர்வம் பிடித்த சுபாவத்தை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். இந்த பொம்மைக்கு விலையாக அல்ல, உன் திருமண பரிசாக நான் உனக்கு ஆயிரம் நாணயங்கள் கொடுக்கிறேன், அதை ஏற்றுக்கொள்," என்றார். திலீப் பரிசை ஏற்றுக்கொண்டான். ஜமீன்தாருக்கு வணக்கம் சொல்லிவிட்டு மங்களாவுடன் தன் கிராமத்திற்கு புறப்பட்டான்.
வேதாளம் இந்தக் கதையைச் சொல்லிவிட்டு ராஜாவைப் பார்த்து, "ராஜா, திலீப் ஒரு பொம்மைக்காக ஜமீன்தாரின் மகளையும் அவனுடைய அளவில்லாத செல்வத்தையும் ஏற்றுக்கொள்ள மறுத்து, கடைசியில் ஒரு பழங்குடி பெண்ணை தேர்ந்தெடுத்தான். அவள் அழகாகவும் இல்லை, வசதியாகவும் இல்லை. இது அவனுடைய அறியாமை இல்லையா?
சரி, அவன் மங்களாவை கல்யாணம் செஞ்சுக்கிட்டான். பிறகு அவளை கூட்டிக்கொண்டு தன் ஊருக்கு போக வேண்டியது தானே. நேரா ஜமீன்தாரை பார்க்க வேண்டிய அவசியம் என்ன இருந்தது? ஜமீன்தார் அவனுக்கு கடுமையான தண்டனை கொடுத்திருந்தால், மங்களாவுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்காதா? அவனுடைய சுபாவம் விசித்திரமாக இல்லையா? இதைப் பார்க்கும்போது திலீப் ஒரு கலைஞர் மட்டும்தான், அவனுக்கு படிப்பு, உலக அறிவு எதுவும் இல்லை என்று தோன்றுகிறது.
இப்படிப்பட்ட முட்டாளை ஜமீன்தார் மன்னித்து மேல அதிகமா பரிசும் கொடுக்கிறார். இது உனக்கு விசித்திரமாக தெரியலையா? என் சந்தேகங்களுக்கு தெரிந்தும் நீ மௌனம் சாதித்தால், உன் தலை நூறு துண்டுகளாகும் என்பதை நினைவில் வைத்துக்கொள்," என்று கேட்டது.
விக்ரமார்க்கன், "திலீப் ஒரு திறமையான கலைஞர் மட்டுமல்ல, அவன் நேர்மையானவனும் கூட. அழகான தோற்றம் மட்டும் இருந்தால் போதாது, மனமும் அழகாக இருக்க வேண்டும். ஜமீன்தாரின் மகளை பார்த்ததும் இந்த உண்மை அவனுக்கு புரிந்தது. மங்களாவைப் பார்த்ததும் உள் அழகு எப்படி இருக்கும் என்று அவனுக்கு தெரிந்தது, அவளை திருமணம் செய்துகொண்டான். யார் மற்றவர்களை மதிக்கவில்லையோ, யார் அதிகார திமிரில் இருக்கிறார்களோ, யார் சுயநலமாக இருக்கிறார்களோ அவர்கள் மனிதனாக இருப்பதற்கு தகுதியற்றவர்கள். மணிமாலா அதற்கு உதாரணம். திலீப்பின் நடத்தையில் முட்டாள்தனமோ அல்லது உலக அறிவு இல்லாமலோ இல்லை. ஜமீன்தாரை பார்க்க போனது அவன் நல்ல குணத்தை காட்டுகிறது, அதை பார்த்து ஜமீன்தாரின் கண்களும் திறந்தன, திலீப்பை அவர் மன்னித்தார்," என்றார்.
ராஜாவின் மௌனம் கலைந்ததால் வேதாளம் சடலத்துடன் மறைந்து மீண்டும் மரத்தில் ஏறி உட்கார்ந்தது.