Bookstruck

மறைந்திருக்கும் வேலைக்காரி

சுந்தரி ஒரு பணக்கார பெண்ணான சுகுமாரியின் தோழி. ஏழையாக இருந்தும் அவள் எப்போதும் யாருடைய உதவியையும் நாட மாட்டாள். மனதில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் இரண்டு தோழிகளும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக் கொள்வார்கள். சுகுமாரியின் வீட்டிற்கு ஒருமுறை தொலைதூரத்திலிருந்து ஒரு நகை வியாபாரி வந்திருந்தார். சுகுமாரியின் தந்தை நான்கு ஐந்து நகைகள் வாங்கினார். அந்த வியாபாரியுடன் நலந்த் என்ற இளைஞனும் வந்திருந்தான். அவன் பார்ப்பதற்கு அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தான். சுகுமாரி அவனிடம் ஈர்க்கப்பட்டாள், அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள். சுந்தரியை அழைத்து தன்னுடைய விருப்பத்தை அவளிடம் சொன்னாள். "நகை வியாபாரி தர்மசாலையில் தங்கியிருக்கிறார். எப்படியாவது நீ அவனைச் சந்தித்து என் மீது இருக்கும் காதலைப் பற்றி சொல்ல வேண்டும். என் அப்பா அவனுக்கு நிறைய வரதட்சணை கொடுப்பார்," என்று கூறினாள். அன்றே மாலையில் சுந்தரி தர்மசாலா சென்று நலந்தை சந்தித்தாள். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தன் தோழி சுகுமாரியின் விருப்பத்தை சொன்னாள். நலந்த் சுந்தரியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளிடமிருந்து எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பிறகு, "உன் அழகால் நான் மயங்கி விட்டேன். நீ சொல்வதைக் கேட்டேன், ஆனால் அதில் என் கவனம் சரியாக இல்லை. நான் திருமணம் செய்தால் உன்னையே தான். இல்லையென்றால் என் உயிரை விட்டு விடுவேன்," என்று சொன்னான். இப்படி ஒரு எதிர்மறையான விளைவு ஏற்படும் என்று சுந்தரி நினைக்கவில்லை. பயந்து போய் அங்கிருந்து எதுவும் பேசாமல் ஓடிவிட்டாள். அந்த வியாபாரி அவர்கள் பேசிக் கொண்டதை தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தார். அவர் நலந்திடம் வந்து, "இந்தப் பெண் புத்திசாலியாகத்தான் இருக்கிறாள். ஆனால் அவள் தன் தோழிக்காக பேச வந்தாள். அதனால் நீயே சுகுமாரியிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்க வேண்டும். இல்லையென்றால் சுந்தரி உன்னை திருமணம் செய்ய சம்மதிக்க மாட்டாள்," என்று சொன்னார். மறுநாள் நலந்த் சுகுமாரியை பார்க்க சென்று நடந்ததை எல்லாம் அவளிடம் தெளிவாக சொன்னான். மேலும், "இதில் சுந்தரியின் தவறு எதுவும் இல்லை. அதனால் அவளை தவறாக நினைக்க வேண்டாம். அவள் இல்லாமல் நான் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நீயே அவளிடம் சமாதானம் சொல்லி இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும்," என்று கூறினான். எல்லாவற்றையும் கேட்ட சுகுமாரிக்கு எதுவும் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறு வழியின்றி அவள் 'சரி' என்று சொல்ல வேண்டியதாயிற்று. சுந்தரிக்கும் நலந்திற்கும் முறைப்படி திருமணம் நடந்தது. இருவரும் அந்த கிராமத்தை விட்டு சென்றுவிட்டார்கள். சில நாட்களுக்கு பிறகு சுகுமாரிக்கும் ஒரு வசதியானவரை திருமணம் செய்து கொடுத்தார்கள். சில வருடங்கள் கழித்து சுந்தரி தன் கணவனுடன் சக்ரபூர் கிராமத்தில் வசித்து வருவதாக சுகுமாரிக்கு தெரிய வந்தது. அவர்கள் அங்கு சந்தோஷமாக இருப்பதாக தெரிந்து கொண்டதும் அவள் பொறாமையில் கொதித்தாள். நாம் எவ்வளவு வசதியாக இருக்கிறோம் என்று நலந்திற்கு காட்ட வேண்டும் என்று நினைத்து சக்ரபூருக்கு சுந்தரியை பார்க்க முடிவு செய்தாள். ஒரு வேலைக்காரியுடன் சக்ரபூருக்கு சென்றாள். சுந்தரி தன் தோழியை அன்போடு வரவேற்றாள். இருவரும் ஒருவரையொருவர் அதிகமாக காதலித்து எந்தவித சண்டையும் இல்லாமல் சந்தோஷமாக இருப்பதை பார்த்து சுகுமாரிக்கு இன்னும் கோபம் அதிகரித்தது. மறுநாள் பொய்யான அனுதாபம் காட்டுகிற மாதிரி சுந்தரியிடம், "உன் வீட்டில் வேலைக்கு யாரும் இல்லை என்பது ரொம்ப வருத்தமாக இருக்கிறது," என்றாள். அதற்கு சுந்தரி சிரித்துக்கொண்டே, "ஏன் என்கிட்ட வேலைக்காரி இல்லன்னு சொல்ற? அவ உனக்கு தெரியாமலே எல்லா வேலையும் செஞ்சுட்டு போயிருவா. பாரு என் வீடு எவ்வளவு சுத்தமா நீட்டா இருக்குன்னு. அப்போ நீயே சொல்லு வேலைக்காரி இல்லாம எப்படி இதெல்லாம் சாத்தியம்?" என்றாள். தோழியின் இந்த பேச்சால் சுகுமாரிக்கு ஆர்வம் அதிகரித்தது. அவள் கவனமாக பார்த்தாள், ஆனால் வேலைக்காரி எங்கேயும் தெரியவில்லை. நான்கு நாட்கள் தங்கிய பிறகு திரும்பி செல்ல முடிவு செய்தாள். புறப்படுவதற்கு முன் சில புடவைகளை எடுத்து சுகுமாரியிடம், "சுகுமாரி நீ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, சொல்ல வார்த்தை இல்ல. இதுல உனக்குப் புடிச்ச புடவைய ஒண்ணு எடுத்துக்கோ, ஞாபகார்த்தமா வச்சுக்க," என்றாள். சுகுமாரி உடனே தன்னுடைய வேலைக்காரியை கூப்பிட்டு புடவை எடுக்க சொன்னாள். சுந்தரியின் முகத்தில் ஆச்சரியம் இருப்பதை பார்த்ததும், "நான் உடுத்துற மாதிரி புடவை எதுவும் உன்னால கொடுக்க முடியாது. அந்த மாதிரி புடவை நான் கட்டினா எனக்கு எவ்ளோ அவமானமா இருக்கும்னு உனக்கு என்ன தெரியும்? அதனால நான் என் வேலைக்காரிக்கு எடுக்க சொல்றேன்," என்றாள். இதற்கு சுந்தரி என்ன சொல்வாள்? இந்த சம்பவத்திற்கு பிறகு சில நாட்களில் சுந்தரியும் தன் அம்மா வீட்டிற்கு சென்றாள். சுகுமாரி வேண்டுமென்றே அவளை பார்க்கச் சென்று திரும்பி வரும்போது, "மாமியார் வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு நாள் கண்டிப்பா என் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு வா," என்றாள். சாப்பிட்ட பிறகு சுகுமாரி புடவைகளை எடுத்து சுந்தரியிடம் ஒரு புடவையை எடுக்க சொன்னாள். மேலும், "இது சாதாரண புடவை இல்ல ரொம்ப விலை அதிகம்! நான் எப்பவும் இந்த மாதிரி புடவை தான் உடுத்துவேன்," என்றாள். சுந்தரி அதில் இருந்து ஒரு புடவையை எடுத்து, "நான் கொடுத்த புடவைய நீ உன் வேலைக்காரிக்கு கொடுத்துட்ட. இப்போ இந்த புடவைய நான் என் வேலைக்காரிக்கு கொடுத்தா சரியா இருக்கும் இல்லையா? தப்பா நினைச்சுக்காத," என்றாள். "ஆமா என் வேலைக்காரிக்கு நான் உடுத்துற மாதிரி தான் புடவை கொடுப்பேன்," என்று பதில் சொல்லிவிட்டு சுந்தரி அங்கிருந்து சென்றுவிட்டாள். சுந்தரி சொன்னதை சுகுமாரியால் மறக்க முடியவில்லை. சுந்தரி தனக்கு தக்க பதிலடி கொடுத்து அவமானப்படுத்தி விட்டாள் என்று நினைத்தாள். அவள் மனதிற்குள் கஷ்டப்பட்டாள். ஒரு மாதத்திற்கு பிறகு சுகுமாரியின் கணவர் ஒரு வேலையாக சக்ரபூருக்கு செல்ல வேண்டியிருந்தது. சுகுமாரியும் வேண்டுமென்றே அவருடன் சென்றாள். அவள் மனதில் இன்னும் அந்த அவமானம் இருந்தது. கணவர் தன் வேலைக்கு சென்றுவிட்டார். சுகுமாரி சுந்தரியின் வீட்டு கதவை தட்டினாள். சுந்தரி கதவைத் திறந்தாள். ஆனால் துணி துவைக்கும்போது இடையில் வந்ததால் அவள் முகம் மற்றும் கை கால்களில் தண்ணீர்த் துளிகள் இருந்தன, முடியும் கலைந்திருந்தது. முக்கியமாக சுகுமாரி கொடுத்த புடவையைத் தான் அவள் கட்டியிருந்தாள். "உன் வேலைக்காரிய பாக்கத்தான் வந்தேன்! இன்னிக்கு அவ வேலைக்கு வரலையா? அவ பேரு சொல்லி வாங்கின புடவைய நீ எப்படி கட்டுன?" என்று ஆச்சரியமாகவும் கேலியாகவும் சுகுமாரி கேட்டாள். சுந்தரி சிரித்து பேச ஆரம்பித்தாள், "அப்படியா? இன்னும் உனக்கு புரியலையா? நான் தான் அந்த வேலைக்காரி! உன் வேலைய நாமலே செஞ்சுக்கணும், சாப்பாட நாமளே சமைச்சு சாப்பிடனும் இதுதானே நல்லது? இதுக்காகத்தானே கடவுள் நமக்கு உடல் உறுப்புகளை கொடுத்திருக்கார்? அத பயன்படுத்தாம நம்ம வேலைய இன்னொருத்தர் செஞ்சா அவங்க ஊனமுற்றவர்கள் தானே? இப்போ நான் ஏன் இந்த புடவைய கட்டிருக்கேன் அப்படிங்குற சந்தேகம் போச்சா? வீட்டு வேலை செய்யும்போது நான் இந்த மாதிரி புடவை தான் கட்டுவேன்," என்றாள். சுந்தரியின் நல்ல மனதையும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டி சுகுமாரி, "பொறாமையாலும் அகங்காரத்தாலும் உன்ன மாதிரி ஒரு நல்ல தோழிய நான் இழந்திருப்பேன். என்னை மன்னிச்சிடு! கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த மாதிரி அதே பரிசுத்தமான அன்ப நம்ம எப்பவும் வச்சுக்கலாம்," என்றாள்.