வசூல் ஆக வேண்டிய கடன்
கணுஷெட் வட்டிக்கடை நடத்தி வந்தார். அவனுடைய ஒரே மகனின் பெயர் ஹரிஷெட். அவனுக்கு இருபத்தி ஐந்தாவது வயதானதும் அவன் மீது வட்டிக்கடை தொழிலை ஒப்படைக்க வேண்டும் என்று கணுஷெட் நினைத்தார்.
ஒருநாள் அவர் யாருக்கெல்லாம் கடன் கொடுத்திருந்தாரோ அவர்கள் பெயர்களையும், அவர்களுக்கு கொடுத்த கடன்களையும் மகனுக்கு காட்டி, யார் எவ்வளவு பணம் கட்டினார்கள், இன்னும் எவ்வளவு வரவேண்டும், என்ற விஷயங்களை விளக்கமாக கூறினார்— "அடே, ஆமாம், நாம உடனே சந்திரபூருக்கு போகணும்."
இவ்வளவு அவசரமாக அப்பா சந்திரபூருக்கு ஏன் போகிறார் என்று ஹரிஷெட்டுக்கு புரியவில்லை. அதை அவன் அப்பாவிடம் கேட்டான். அப்போது கணுஷெட் கூறினார்— "சந்திரபூர் மட்டுமல்ல, ராம்பூருக்கும் போகணும். நாம ஊருக்கு திரும்பி வரும் வரை ஏன் போறோம், அங்க நான் என்ன பேசினேன் என்று எதுவும் கேட்காதே. எனக்கு கோபம் வரும்."
இருவரும் சந்திரபூர் போய்சேர்ந்ததும் கணுஷெட் ராம்ஜி என்ற ஒரு விவசாயியின் வீட்டிற்கு போனார். ராம்ஜி அவரிடம் கேட்டார்— "என்ன சேட்ஜி! இப்படி திடீர்னு எப்படி வந்தீங்க?"
"ஒன்னும் விசேஷம் இல்ல ராம்ஜி! நான் ராம்பூருக்கு போயிட்டு இருந்தேன், வழியில் இங்க வந்தேன். போயிட்டு இருந்ததால வழியில் உன்னை பார்த்துட்டு உன்னுடைய தொகையை எப்ப கொடுக்குறீங்கன்னு கேட்டுட்டு போகலாம்ன்னு வந்தேன். இப்போ வரைக்கும் நீங்க மாசம் மாசம் கட்டுறதா ஒத்துக்கிட்ட நாலாயிரம் ரூபாய் தொகைய தவிர உங்க மேல இன்னும் ஐயாயிரம் ரூபாய் கடன் இருக்கு. மீதி இருக்கிற தொகைய கூட சீக்கிரமே கட்டிறது நல்லது!"
கணுஷெட் சொன்னதை கேட்ட ராம்ஜி கோபமாக கூறினார்— "சேட்ஜி, உங்க வயசு அதிகமாகிட்டே போறதுனால உங்க மண்டைய கூட மந்தமாகிட்டே போற மாதிரி தெரியுது! நான் இன்னைக்கி வரைக்கும் ஒத்துகிட்ட மாதிரி மாசம் மாசம் ஆயிரம்ன்னு நாலாயிரம் கட்டி இருக்கேன். இப்போ என் மேல மிச்சம் இருக்கிற கடன் மூவாயிரம் மட்டும் தான். வேற யாருடைய கடனை என் தலையில கட்டலாம்ன்னு ஐடியா இருக்கா?"
"சரி சொன்னீங்க!" அப்படின்னு சொல்லிட்டு சொடக்கு போட்டு கணுஷெட் தொடர்ந்து கூறினார்— "அட ஆமாம், அது டகுடுவுக்கு கொடுத்த கடன்! நான் தெரியாம உங்க கடன்னு சொல்லிட்டேன்!"
அதன் பிறகு அப்பாவும் மகனும் ராம்பூருக்கு போனாங்க, பீம்ராவ் என்ற விவசாயியை பார்த்து சொன்னாங்க— "பீம்ராவ், நீங்க இப்போ வரைக்கும் கட்டின தொகை இரண்டாயிரம் ரூபாய் மட்டும் தான். நாலாயிரம் ரூபாய் எப்ப கொடுக்கிறதா இருக்கீங்க?"
பீம்ராவ் கொஞ்சம் பயந்துகிட்டே கூறினான்— "சேட்ஜி, நான் கட்டின தொகை இரண்டாயிரம் இல்ல, மூவாயிரம்! இப்போ உங்களுக்கு நான் வட்டியோட சேர்த்து கொடுக்க வேண்டிய தொகை மூவாயிரத்தி ஐநூறு ரூபாய்! இந்த மாசம் எல்லா தொகையையும் மொத்தமா குடுக்கலாம்ன்னு இருக்கேன் நான்!"
உடனே கணுஷெட் சொன்னார்— "பீம்ராவ், நான் தெரியாம கனோஜிகிட்ட வர வேண்டிய தொகைய உங்ககிட்ட சொல்லிட்டேன். உங்க கணக்கு நீங்க சொன்ன மாதிரி தான் இருக்கு!" இப்படி சொல்லிட்டு கணுஷெட் மகனோட வீட்டுக்கு திரும்பிட்டார்.
ஹரிஷெட் அப்பாவிடம் கேட்டான்— "யார்கிட்ட இருந்து எவ்வளவு தொகை வரணும்ன்னு கணக்கு புத்தகத்துல பார்க்காமலே ஒரே சொடக்குல சொல்ற நீங்க ஒருத்தர்ட்ட வசூல் ஆக வேண்டிய தொகைய இன்னொருத்தர் மேல எப்படி போட்டீங்க, இந்த குழப்பம் ஏன் செஞ்சீங்க?"
கணுஷெட் சிரிச்சுக்கிட்டே சொன்னார்— "உண்மை சொல்லவா, ராம்ஜிகிட்ட இருந்தும் பீம்ராவ்கிட்ட இருந்தும் நமக்கு வர வேண்டிய தொகை எவ்வளவுன்னு கடன் பத்திரமும் கணக்கும் எங்க போச்சுன்னே தெரியல. அதனால அவங்க வாயால அவங்க கட்டின தொகையும் அவங்ககிட்ட இருந்து நமக்கு திரும்பி வர வேண்டிய தொகையையும் வரவச்சிட்டேன். அதனால நீ சீக்கிரமா ஒரு புது நோட்டுல அந்த தொகைய எல்லாம் எழுதி வை."